<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Tuesday 7 August 2018


தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில மாநாடு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் திருப்பூரில் எழுச்சியுடன் நடைபெற்றது.. 
தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் 6ஆவது மாநில மாநாட்டை திருப்பூரில் எழுச்சியுடன் நடத்த 108 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.திருப்பூர் மெயின் தொலைபேசி நிலைய வளாகத்தில் சனியன்று தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் ஏ.முகமது ஜாபர், எம்.பி.வடிவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் சார்பில் சி.ராஜேந்திரன் வரவேற்றார்.திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்களும், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினரும் இந்நிகழ்வுக்குத் திரண்டு வந்திருந்தனர்.
மேலும், அக்டோபர் 1, 2 தேதிகளில் திருப்பூரில் 6ஆவது மாநாட்டை சீரும், சிறப்புடன் நடத்துவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இம்மாநாட்டை எழுச்சியுடன் நடத்துவதற்கு கூட்டத்தில் பங்கேற்றோர் மனமுவந்து நிதிகளை அளித்தனர். குறிப்பாக சங்க நிர்வாகிகள் தங்கள் இரண்டு மாத சம்பளம், ஒரு மாத சம்பளம் தருவதாக அறிவித்தனர். அத்துடன் மாநாட்டு நிதியாக ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என வசூலித்து தருவதாகவும் உறுதியளித்தனர்.மாநாட்டு நிதியாக முதல் தவணையாக மொத்தம் ரூ.35 ஆயிரத்து 555 வசூலானது. அத்துடன் ரூ.4.50 லட்சம் வசூலித்து தருவதாகவும் உறுதியளித்தனர்.
இந்த தகவலை பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா பலத்த கரவொலிக்கு இடையே அறிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் எஸ்.செல்லப்பா, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன், தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர் சி.பழனிசாமி, மாநிலச் செயலாளர் சி.வினோத்குமார் மற்றும் சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.
வரவேற்புக்குழு
மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராக கே.உண்ணிகிருஷ்ணன், செயல் தலைவர்களாக எஸ்.சுப்பிரமணியம், எம்.பி.வடிவேல், செயலாளராக எஸ்.சண்முகசுந்தரம், பொருளாளராக என்.குமரவேல், உதவிப் பொருளாளராக கல்யாணராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டுப் பணிகளை செம்மையாக நிறைவேற்ற 20 உப குழுக்களுடன் மொத்தம் 108 பேர் வரவேற்புக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment