<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

'தோழர்' 

'தோழர்' என்ற வார்த்தை முற்போக்கு அரசியலுக்கு உரியது. முற்போக்கு இயங்களில் இருப்பவர்களும் இயங்களில் இல்லாவிட்டாலும் முற்போக்குக் கருத்தியல் கொண்டவர்களும் 'அம்மா' 'அப்பா' என்ற வார்த்தையை விட அதிகம் நேசிப்பது இந்த வார்த்தையைத்தான். 'அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே' என்ற சேகுவாராவின் வார்த்தைகளும் தமிழர்கள் மத்தியில் புகழ்பெற்றதுதான்.

19ஆம் நூற்றாண்டில் 'தோழர்' என்னும் வார்த்தை ஒரு அரசியல் சொல்லாடலாக உருப்பெற்றாலும் அதற்குமுன்பே நமது பழந்தமிழ் இலக்கியத்திலும் இந்த வார்த்தை உண்டு. 

இவர் யார்?` என்குவை ஆயின் இவரே ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன் முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை படுமணி யானைப் பறம்பின் கோமான் நெடுமாப் பாரி மகளிர்; யானே தந்தை தோழன் இவர்என் மகளிர்' என்கிறார் மூவேந்தர்களால் வஞ்சகமாய் வீழ்த்தப்பட்ட பாரி மன்னனின் 'தோழரான' புலவர் கபிலர்..

உலகளவில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைபொருள் இந்த வார்த்தை. பிரெஞ்சுப் புரட்சியை நடத்தியவர்கள் தங்களுக்குள் 'சிட்டுவாயோன்' என்று அழைத்துக்கொண்டனர். 'சிட்டுவாயோன்' என்றால் 'குடிமகன்' என்று பொருள். பின்னாளில் ரஷ்யப் புரட்சி வீரர்கள் 'காம்ரேட்' என்று அழைக்கத்தொடங்கினர். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருப்பவர்கள் 'காம்ரேட்' என்று தங்களை அழைத்துக்கொண்டாலும் அதற்கு இணையான அழகான, தனித்துவமிக்கத் தமிழ்ச்சொல்லாக உருவானது 'தோழர்'.

'தோழர்' என்ற வார்த்தையைத் தமிழில் முதன்முதலில் பயன்படுத்தியவர் திரு. வி.க. என்கிறது ஒரு வரலாற்றுக் குறிப்பு. இந்தியாவில் முதல் தொழிற்சங்கத்தைத் தொடங்கியவர் திரு வி.கல்யாணசந்தரம். திரு.வி.க.விற்குப் பிறகுத் தொழிற்சங்கத் தலைவரான பொம்மன் ஜி வாடியா, மான்சென்ஸ்டர் தொழிலாளர்கள் அழைப்பின்பேரில் இங்கிலாந்து சென்று வந்தார். தமிழகம் வந்த  அவரை வரவேற்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் 'காம்ரேட்ஸ்' என்று உரையைத் தொடங்கினார் வாடியா. அதைத் 'தோழர்களே' என்று மொழிபெயர்த்தார் திரு.வி.க.

சோவியத் யூனியன் செல்வதற்கு முன்பே பெரியாருக்குப் பொதுவுடைமைக் கொள்கைகளில் ஆர்வம் இருந்தாலும் 1931ல் ரஷ்யா சென்றுவந்தபிறகு கம்யூனிசத்தைப் பரப்புவதில் தீவிரம் காட்டினார்.

"இயக்கத் தோழர்களும் இயக்க அபிமான தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளுவதிலும், பெயருக்கு முன்னால் பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக “தோழர்” என்கின்ற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும், மகா, ஸ்ரீ, கனம், திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜத் என்பது போன்ற வார்த்தைகள் சேர்த்து பேசவோ எழுதவோ கூடாது என்று வணக்கமாய் வேண்டிக் கொள்ளுகிறேன். “குடி அரசி” லும் அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்" இது 13.11.1932ல் பெரியார் குடியரசில் எழுதியது.

பெரியாரின் முக்கியத் தளபதியும் சிறந்த பேச்சாளருமான பட்டுக்கோட்டை அழகிரிசாமி மேடையில் 'தோழர் ராமசாமி' என்றுதான் பெரியாரை அழைப்பாராம். பெரியாரும் தன் கட்டுரைகளில் மாற்றுக் கருத்துள்ளவர்களைக்கூட  அப்படித்தான் விளித்து எழுதினார். காந்தி, 'மகாத்மா' என்றழைக்கப்பட்டபோது 'தோழர் காந்தியார்' என்றெழுதினார் பெரியார். 'பெரியார் என்று என்னை அழைக்கவேண்டாம்; தோழர் என்றே அழையுங்கள்' என்று அவர் சொன்னாலும் 'பெரியார்' என்ற பெயரே நிரந்தரம் ஆனது..

அண்ணா, திராவிடர் கழகத்தில் இருந்த காலம் முழுவதும், தி.மு.க. தொடங்கிய ஆரம்பகாலங்களிலும் 'தோழர்' என்று தன் உரைகளில் குறிப்பிட்டுப் பேசியிருப்பதைப் பழைய 'குடியரசு', 'திராவிட நாடு' இதழ்களில் படித்தால் தெரிந்துகொள்ளலாம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகத் தி.மு.க.வில் இப்படி விளிப்பது மறைந்துபோய் அண்ணா, கலைஞர், நாவலர் என்று அடைமொழிகளே பெயர்கள் ஆயின. அடைமொழிகள் இல்லாதவர்கள் ஆற்காட்டார், நாஞ்சிலார் என்று ஊர்ப்பெயர்களையே அடைமொழிகளாக மாற்றிக்கொண்டார்கள். 'தோழர்' என்ற சமத்துவச் சொல்லும் மனநிலையும் மறைந்து தலைமை வழிபாடு தலைதூக்கத் தொடங்கியது. இப்போதும் அத்திபூத்தாற்போல் கருணாநிதி, அன்பழகன், சிலசமயம் ஸ்டாலின் அறிக்கைகளிலும் 'கழகத்தோழர்கள்' என்ற வார்த்தையைப் பார்க்கமுடியும். அ.தி.மு.க. ஆரம்பித்ததில் இருந்தே பிம்பங்களையும் தலைமை வழிபாட்டையும் அடிப்படையாகக் கொண்ட கட்சி என்பதால் அங்கே 'தோழருக்கோ' தோழமைக்கோ வழியேயில்லை. 

இப்படித் திராவிட இயக்கங்கள் 'தோழரை'க் கைவிட்டாலும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் 'தோழரை'க் கைவிடவில்லை. எந்த கம்யூனிஸ்ட் இயக்கங்களாக இருந்தாலும் அவர் வட்டச் செயலாளராக இருந்தாலும் தேசியளவிலான தலைவராக இருந்தாலும், பொலிட்பீரோ உறுப்பினராக இருந்தாலும், தொழிற்சங்கத்தின் சாதாரண உறுப்பினராக இருந்தாலும் அவர் 'தோழர்'தான். தலைமை வழிபாடு என்பதற்குச் சம்மட்டி அடிக்கும் சொல் 'தோழர்'. மற்ற எந்த இயக்கங்களிடம் இல்லாத இந்த அரிய பண்பைக் காப்பாற்றிவரும் பெருமை கம்யூனிஸ்ட் தோழர்களுக்கே உண்டு. இப்போது மார்க்சிய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, தலித் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், தமிழ்த்தேசிய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், பெரியாரிஸ்ட்கள், அம்பேத்கரிஸ்ட்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் எனப் பலரும் பரவலாக 'தோழர்' என்னும் சொல்லைப் பயன்படுத்திவருகின்றனர்.

பொதுவாக ஒரு சமூகத்தில் காணப்படும் அதிகாரமும் வன்முறையும் அந்த சமூகத்தின் மொழியிலும் பிரதிபலிக்கும். தமிழிலும் சாதிய, ஆணாதிக்கச் சொற்கள் ஏராளம். ஆனால் பால் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஆண், பெண், திருநங்கைகள் என அனைவருக்கும் பொதுவான சொல் 'தோழர்'.

தோழர் - சமத்துவத்துக்கான சொல், தலைமை வழிபாட்டுக்கு எதிரான சொல், தோழர் - ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான சொல், தோழர் - ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சொல், தோழர் - அதிகார மய்யங்கள் அச்சப்படும் சொல், தோழர் - கேட்கப்படாத குரல்களின் சொல்.

No comments:

Post a Comment